டாக்டர் நல்ல பழனிசாமி சிறந்த மருத்துவர், கல்வியாளர், சமூக ஆர்வலர், தலைசிறந்த தமிழ்ப் பற்றாளர். தமிழகத்தின் தொழில் நகரான கோவை மாநகரில் கோவை மெடிகல் சென்டர் மற்றும் மருத்துவ மையம் என்னும் பல்துறை மருத்துவமனையைத் தொடங்கி கோவைக்கு மருத்துவ மகுடம் சூட்டியவர். மருத்துவத் தொண்டோடு, டாக்டர் என்.ஜி.பி கல்விக் குழுமத்தினைத் தொடங்கிக் கல்விப் பணியையும் செய்து கொண்டிருப்பவர். அனுவாவி சுப்ரமணியர் சுவாமி திருக்கோயிலிலும் மருதமலை முருகன் திருக்கோயிலிலும் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்து அரும் திருப்பணிகளைச் செய்தவர்.
இவர்தம் பணிகளைப் பாராட்டி கோவை, பாரதியார் பல்கலைக் கழகம் 2011 ஆம் ஆண்டு இவருக்கு மதிப்புறு முனைவர் (Honorary D.Sc.) பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியது. டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 2012-ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்புச் செய்தது. கோவை சுழற்சங்கம் பொதுத் தொண்டுக்கான தன்னுடைய உயரிய கேலக்ஸி கௌரவ விருதினை இவருக்கு வழங்கிச் சிறப்பித்தது.
தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் வளர்ச்சி/மேம்பாட்டுக்கென்று ஓர் அமைப்பை உருவாக்கி நற்பணிகள் ஆற்றிட வேண்டும் என்னும் இவருடைய தனியா ஆர்வத்தின் அடையாளமே உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்.
கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத்தலைவர். கவிதை, இலக்கிய வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் படைப்புகளைக் கொடுத்து வருபவர். படைப்பும், பதிப்பும் இவரது தலையாய பணிகள்.
தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர். சாகித்திய அகாதமியின் பொதுக்குழு உறுப்பினராகவும் (1993-1998), சாகித்திய அகாதமியின் செயற்குழு உறுப்பினராகவும் (2008-2012) பணியாற்றியவர். தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் சிற்பி அறக்கட்டளை மூலம் விருதுகள் அளித்து வருகின்றார்.
-->